Search This Blog

Saturday 30 July 2011

அனாச்சார சடங்குகள்

Post image for அனாச்சார சடங்குகள்
இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே நேரான மார்க்கத்தில் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் புகுத்தியதால் பொதுவாகப் பல மதங்கள் தோன்றியிருக்கின்றன. எனவே மனித யூகங்களால் பெறப்பட்ட மதங்களில் மாற்றாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவுப்படுத்தப் பட்டிருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.. எனவே மதவாதிகளால் தீய சக்திகளால் வகுப்பு, இன, மதக் கலவரங்கள் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாம் நமது கடமை என்ன? மாற்று மதத்தாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று குர்ஆனும் ஹதீதுகளும் போதிக்கின்றன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த தெளிவான் அறிவு இல்லாத காரணத்தினால் அறிந்தோ, அறியாமலோ தீய சக்திகளுக்கு இவர்களும் துணைபோகும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.
இந்த நிலையில் இந்திய நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தக்க கவனம் செலுத்தி குர்ஆன், ஹதீதுகளின் போதனைகளை எடுத்து நடக்க முற்படாவிட்டால் இன்னும் பல தீய விளைவுகளை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க நேரிடும் என்ற கசப்பான உண்மையை நம்மால் மறைக்க முடியாது.
இஸ்லாம் அனுமதிக்காத பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பேரிலேயே நடைமுறைப் படுத்தி வருவதால், வகுப்பு கலவரங்கள் ஏற்பட முஸ்லிம்களும் துணை போகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இந்தியாவில் நடந்துள்ள பெரும்பாலான கலவரங்களை நாம் உற்று கவனிக்கும்போது மீலாது, பஞ்சா, உரூஸ் ஊர்வலங்கள், தர்கா சடங்குகள், இன்னும் இதுபோன்ற இஸ்லாத்தில் எள்ளளவும் ஆதாராமில்லாத அனாச்சார புதுமைகள் (பித்அத்) சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் நடத்த முற்படும்போது கலவரங்கள் ஏற்பட்டுள்ளதை காண்கிறோம். இந்த அனாச்சார சடங்குகளை முஸ்லிம்கள் தவிர்த்திருப்பார்களானால் பல கலவரங்கள் இடம்பெற வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும் என்பதை முஸ்லிம்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும்.
தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு மாற்று மதத்தினர் நடைமுறைப் படுத்தும் அனாச்சாரங்களை ஒரு சில வித்தியாசங்களோடு இவர்களும் செய்துவருவதால் முஸ்லிம்களும் சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் தான் என்று மாற்று மதத்தினர் இஸ்லாத்தைப் பற்றி குறைவாக நினைக்கும் விதத்திலேயே இவர்களின் செயல்கள் அமைந்து விடுகின்றன.
இதற்கு மாற்றமாக குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஆதாரமில்லாத சடங்குகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டி இஸ்லாம் கூறும் மார்க்க நடைமுறைகளை உள்ளச்சத்தோடும், உறுதியோடும் கடைப்பிடிப்பார்களேயானால் இவர்களின் இச்செயலை பார்க்கும் மாற்று மத சகோதரர்களும் உண்மையான வாழ்க்கை நெறி இஸ்லாத்தில் தான் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து அவர்களும் இஸ்லாத்தை தழுவும் சந்தர்ப்பங்கள் பல ஏற்படலாம். குறைந்த பட்சம் துவேஷ மனப்பான்மையோடு முஸ்லிகளோடு நடந்து கொள்வதை விட்டு சிநேக மனப்பான்மையோடு பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.
குர்ஆன், ஹதீதுகளை தவிர்த்துவிட்டு பின்னால் வந்தவர்களின் அபிப்பிராயங்களை ஆதாரமாகக் கொண்டு நாம் செயல் படுவதால் மாற்று மதத்தாருடன் இருக்க வேண்டிய உறவுகள் துண்டிக்கப்பட்டு துவேஷ மனப்பான்மையும், அது முற்றிக் கலவரங்களும் ஏற்பட நமது இந்தச் செயல்களும் காரணமாக அமைந்து விடுகிறது. சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் விஷக் கருத்துக்களை முஸ்லிம் சமுதாயத்தில் விதைப்பவர்கள் அவற்றின் தீய விளைவுகளைச் சிந்தித்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment