Search This Blog

Saturday 30 July 2011

கதைகளின் பெயரால் இடைச்செருகல்கள்

கதைகளின் பெயரால் இடைச்செருகல்கள்
பொய்யான ஹதீஸ்களைப் கூறுவதில் கதை சொல்லக்கூடியவர்களும் இடம்பெற்றிருந்தனர். பள்ளிவாசல்களில் அமர்ந்து கதை சொல்லும் பழக்கம் ஆரம்ப கால முதலே இருந்து வந்துள்ளது. கதை சொல்வதில் திறமை பெற்றவர்கள் பலர் இருந்து வந்துள்ளனர். இவர்களில் 'தமீமுத்தாரி' என்பாரும் ஒருவராவர். இவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் கதை சொல்ல அனுமதி கேட்டபோது உமர்(ரழி) அவர்கள் மறுத்துவிட்டார்கள். 'அம்ர்பின் ஸர்ரார்' என்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரழி) அவர்கள் காலத்தில் கூஃபாவிலுள்ள பள்ளிவாசலில் அமர்ந்து மக்களுக்குக் கதை சொல்லி வந்தார். அதை அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரழி) அவர்கள் தடுத்துள்ளார்கள். நூல்: தஹ்தீருல்கவாஸ்

கதை சொல்லக்கூடியவர்கள் பாமர மக்களை தன்பக்கம் இழுப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள் எதைக் கூறினாலும் அம்மக்கள் அப்படியே நம்பக் கூடியவர்களாய் இருந்தனர். நல்ல சிந்தனையாளர்கள் குர்ஆன், ஹதீஸ் பற்றிய அறிவில் தங்கள் சிந்தனையை செலவிட்டதினால் இதுபோன்ற கதை சொல்பவர்களுக்குச் சிறிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

இப்னு குதைஃபா என்ற பெரியார் சொல்கிறார், கதை சொல்பவர்கள் முற்காலத்திலிருந்தே மக்களின் முகங்களை தங்கள் பக்கம் திருப்புவதற்காக பொய்யான ஹதீஸ்களையும், வெறுக்கப்பட்ட பல சம்பவங்களையும் கூறிவந்தனர். பாமரர்களின் சிந்தனையை சிதற வைக்கும் அறிவிற்கு எட்டாத பல சம்பவங்களையும், அவர்களின் உள்ளத்தை நெகிழ வைக்கும் பல கதைகளையும் சொல்லி வந்தனர்.

சுவர்க்கத்தைப் பற்றிக் கூறினால் அல்லாஹ தன் நேசர்களுக்காக சுவர்க்கத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்ட வெள்ளைக் கோட்டையைக் கொடுக்கிறான். அதில் எழுபது மாளிகைகள் இருக்கும். ஒவ்வொரு மாளிகையிலும் ஆயிரம் கூடாரங்கள் இருக்கும்... என்றெல்லாம் பொய்களைக் கூறி, ஆசைகளால் மக்களை தங்கள் பக்கம் கவர்ந்தனர். (தஃவீலுமுக்தலபில் ஹதீஸ்)

பொய்யான கதைகளைப் புனைந்து கூறும் பொய்யர்களின் பித்தலாட்டங்களை அறிந்த அறிஞர்கள் அவர்களின் வேஷங்களைக் கிழித்தெறிய பெரு முயற்சி எடுத்தார்கள். இவ்வறிஞர்களில் 'அஃமஷ்' என்ற பெரியாரும் ஒருவராவார். இவர் ஹிஜ்ரி 147ம் ஆண்டு மரணமடைந்தார். இவர் ஒருமுறை பாஸராவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நுழைந்தபோது அங்கே ஒருவர் மக்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். கதை சொல்லிக் கொண்டிருந்தவருக்கு இவர்தான் 'அஃமஷ்' என்று தெரியாது. அப்போது அக்கதை சொல்பவர் ''அஃமஷ் என்பவர் அபூ இஸ்ஹாக் சொன்னதாகச் சொல்கிறார் என்று சொல்லி, ஒரு பொய்யான கதையைச் சித்தரித்துக் கூறினார். அப்போது அஃமஷ் அவர்கள், அமர்ந்திருந்த மக்களின் நடுவே சென்று தனது அக்குள் முடியைப் பிடுங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்டு கதை சொல்பவர் அஃமஷை நோக்கி, ''நீர் வெட்கப்படவில்லையா? நாங்கள் ஒரு கல்வி அவையில் இருந்து கொண்டிருக்கிறோம், நீரோ இப்படிச் செய்கிறீரே'' என்றார்.

உடனே ''நான் செய்வது நீர் செய்வதைவிடச் சிறந்தது'' என்று கூறினார். ''அது எப்படி'' என்று கதை சொல்பவர் கேட்டபோது ''நான் ஒரு சுன்னத்தைச் செய்கிறேன், நீர் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறீர். நான்தான் அஃமஷ், நீர் குறிப்பிட்டது போன்று ஒரு ஹதீஸை நான் உமக்கு சொல்லவில்லையே? நீர் எப்படி நான் சொன்னதாகச் சொன்னீர்?'' என்று சொல்லி மக்கள் மத்தியில் கதை சொல்பவரின் முகத் திரையைக் கிழித்து, அவரது பித்தலாட்டங்களை அடையாளம் காட்டினார்கள். நூல்:தஹதீருல் கவாஸ்

ஹதீஸ்களில் பெரும் மேதைகளாகத் திகழ்ந்த இமாம் அஹமத் பின் ஹம்பல் (ரஹ்) இமாம் யஹ்யாப்னு முயீன் (ரஹ்) ஆகிய இருவரும் ''ரஸ்ஸபா'' எனும் இடத்தில் ஒரு பள்ளிவாசலின் உள்ளே சென்றபோது அங்கு ஒருவர் மக்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அவைக்கு அவ்விருவரும் சென்றார்கள். கதை சொல்பவருக்கு அவ்விருவரும் யார் என்பது தெரியாது. அவர் தன் கதையில் அவ்விரு இமாம்களும் சொன்னதாக சுமார் இருபது பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட ஹதீஸை மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

மக்கள் அவருக்கு பல அன்பளிப்புகள் வழங்கினார்கள். அவர் தனது கதையை முடித்ததும் யஹயாப்னு முயீன் (ரஹ்) அவர்கள் அம்மனிதரை அழைத்து ''நாங்கள் இருவரும் அறிவித்ததாக ஒரு ஹதீஸை மக்களுக்குச் சொன்னீரே அதை நாங்கள் அறிவிக்கவில்லையே! நீர் எப்படி இதை அறிவித்தீர்? என்று கேட்டபோது ''யஹ்யாப்னு முயீன் ஒரு மடையர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். யஹ்யா, அஹமத் என்ற பெயருடையோர் உங்கள் இருவரையும் தவிர இவ்வுலகில் வேறு யாருமில்லையா? நான் இவர் அல்லாமல் பதினேழு அஹமத் பின் ஹம்பலைப் பற்றி எழுதியிருக்கிறேன்'' என்று தான் சொல்லிய பொய்யை சரி செய்ய பல பொய்களைக் கூறினார். இதுவே கதை சொல்லக்கூடியவர்களின் வழக்கமாக இருந்து வந்தது (அல்மஸ்ருஹீன்)

இதுபோன்ற கதைகளின் பெயரால் பொய்யான ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறியவர்களை ஹதீஸ் கலையில் தேர்ச்சிப் பெற்ற அறிஞர்கள் இனம் காட்டிய பின்னரும் பல மக்கள் கதை சொல்பவர்கள் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்தனர். காரணம், இவர்கள் மக்களை தங்கள் பக்கம் இழுப்பதும், அவர்களை அழ வைப்பதும் தங்களைப்பற்றி மக்கள் பெருமையாகப் பேசுவதும்தான், கதை சொல்பவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. எந்த வகைகளிலெல்லாம் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க முடியுமோ அவ்வழிகளையெல்லாம் கையாண்டார்கள். குறிப்பாக நபி அவர்கள் சொன்னதாகச் சொல்லும்போது, மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே ஹதீஸ்களின் பெயரால் பல கதைகளைச் சித்தரித்துக் கூறினார்கள். (தஹதீருல்கவாஸ்)

மத்ஹபுகளின் பெயரால் இடைச்செருகல்கள்
மத்ஹபுகளை பின்பற்றுகின்றவர்களில், மத்ஹபுகளில் பிடிவாதம் கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் மத்ஹபு கூறும் சட்டங்களுக்கு சாதகமாக பல ஹதீஸ்களை புனைந்து கூறினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பின்பற்றும் இமாமை புகழ்ந்து கூறி, ஹதீஸ்களை உருவாக்கி கூறிவிட்டு அதை நபி அவர்கள் சொன்னதாகச் சொல்லி விட்டனர்.

"என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார் அவருடைய பெயர் நுஃமான் பின் தாபித், அவர் அபூஹனீபா என்றப் புனைப்பெயரால் அழைக்கப்படுவார். அவர் தனது கையால் அல்லாஹவுடைய மார்க்கத்தையும், என் சுன்னத்தையும் உயிர்ப்பிப்பார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு பொய்யைத் துணிந்துக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் அடுத்த மத்ஹபுடைய இமாமை தாழ்த்தியும் பல ஹதீஸ்களை உற்பத்தி செய்தனர். நூல்: தாரீகு பக்தாது

''என்னுடைய உம்மத்தில் ஒரு மனிதர் வருவார், அவருடைய பெயர் முஹம்மது பின் இத்ரீஸ் (ஷாஃபீ). அவர் என்னுடைய உம்மத்தைக் கெடுப்பதில் இப்லீஸைவிட மிக மோசமானவர்'' என்று நபி அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டியுள்ளனர். நூல்: தன்ஷிஹுஷ்ஷரீயத்

சிலர் தாங்கள் பின்பற்றுகின்ற மத்ஹபு கூறுகின்ற சட்டங்கள் நபி அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றமாக இருந்தாலும் மத்ஹபு மீதுள்ள வறட்டுப் பக்தியினால் அதன் சட்டங்களை சரி செய்வதற்காக சில ஹதீஸ்களைப் புனைந்து கூறியுள்ளனர்.

''யார் தனது தொழுகையில் கையை உயர்த்துகிறானோ அவனுக்குத் தொழுகை இல்லை'' என்று நபி அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிக் கூறியுள்ளனர். காரணம் தொழுகையில் கையை உயர்த்தக் கூடாது என்பதுதான் அவர்களின் மத்ஹப் சட்டம். நூல்: அஸ்ஸுன்னத் வமாகானதுஹா

தொழுகையில் இமாம் பிஸ்மியை சப்தமிட்டு ஓதவேண்டுமென்ற மத்ஹபுடையர்கள் அவர்களின் மத்ஹபுக்குச் சாதகமாக பின்வருமாறு ஒரு பொய்யான ஹதீஸை உற்பத்தி செய்து கூறினர்.

''காஃபத்துல்லாஹவில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு இமாமாக நின்று தொழுதார்கள் அப்போது பிஸ்மியை சப்தமிட்டு ஓதினார்கள்'' என்று நபி அவர்கள் கூறியதாக பொய்யாகக் கூறியுள்ளனர். நூல்: தன்ஷிஹுஷ்ஷரீயத்

இது போன்று மத்ஹபு வெறிபிடித்தவர்கள் இது போன்ற பல ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துள்ளனர். அவை அவ்வப்போது மக்களுக்கு இனம் காட்டப்பட்டு வந்துள்ளது.
இதுவரை நபி அவர்களின் காலத்தில் இருந்த தெளிவான நிலை, நபி அவர்களின் மறைவுக்குப்பின் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின் பெயரால் ஏற்பட்ட குழப்படிகள், இட்டுக்கட்டுகள், இடைச்செருகல்கள் இவற்றை எல்லாம் சரித்திர ஆதாரங்களைக் கொண்டு பார்த்தோம். ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளுக்கிடையிலும் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இனம் காட்டி, உண்மை ஹதீஸ்களை நம்மளவில் கொண்டு சேர்க்க பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டவர்களை நாம் நினைவு கூறாமல் இருக்கமுடியாது. அவர்கள் செய்த அந்தபெரும் சேவையின் காரணமாகவே இன்று நான் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறிந்து கொள்ள முடிகின்றது. இல்லை என்றால், மற்ற நபிமார்களின் உம்மத்துகள் தங்கள் நபிமார்கள் செய்ததாக, சொன்னதாக நம்பி அந்த நபிமார்களின் சத்திய போதனைகளுக்கு மாற்றமாகச் செயல்படும் அதே தவறான நிலைக்கு நாமும் தள்ளப்பட்டிருப்போம். எனவே இனி தொடர்ந்து அந்த வரலாறுகளைப் பார்ப்போம்.

No comments:

Post a Comment